எனைத் தாங்கி அருள், கருணைவாரி
பல்லவி
தருணமே, பரம சரீரி; எனைத்
தாங்கி அருள், கருணைவாரி.
அனுபல்லவி
உரிமை அடியர் அனுசாரி,-உயர்
எருசலை நகர் அதி காரி, அதி - தரு
சரணங்கள்
1. வரர்[1] அடி தொழும் வெகு மானி,[2]-பரன்-மகிமை ஒளிர்
தேவ சமானி,
நரர் பிணை ஒரு பிரதானி,-யேசு-நாயகன் என தெஜமானி,
அதி. - தரு
2. ஆதாரம் உனை அன்றி யாரே?-எனை-அன்பாய்த்
திருக்கண் கொண்டு பாரே;
பாதாரவிந்தம்[3] கதி சேரே,-இஸ்ரேல்-பார்த்திபன் தவிது
வங்கிஷ வேரே, அதி. - தரு
3. நித்த நித்த மாக என்றன் மேலே-வருவ-தெத்தனை துன்
பங்கள் ஒருக்காலே;
அத்தனையும் நீக்குதற்குன் காலே-எனக்-குத்தம துணைதான்,
மனு வேலே, அதி. - தரு
4. கங்குல[4] பகலும் துயரம், கோவே;-வரும்-கலக்கம் ஒழித்
தெனைத் தற் காவே!
பங் கெனக்குத் தந்த மெய் மன்னாவே,-ஏழைப்-பாவியை
ரட்சியும், ஏசு தேவே! அதி. - தரு
ராகம்: சைந்தவி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்
[1] வானோர்
[2] பெரியோர்
[3] பாதமாகிய தாமரை
[4] தோட்டத்தில்