233. தாகம் மிகுந்தவரே அமர்ந்த

தாகம் மிகுந்தவரே

பல்லவி

தாகம் மிகுந்தவரே, அமர்ந்த
தண்ணீரண்டை வாரும்.-ஓ!

1. ஏகன் நானுங்களையே அழைக்கும் என்தன்
    இன்பவாக்குத்தத்தமே,-நம்பி
வேகமாக ஓடி வாருமெனதிடம்,
    வேண்டியதைத் தருவேன். - ஓ!

2. காசுபணமது, அற்றுலகந்தன்னில்
    கஷ்டப்படுவோரே,-விசு
வாசமாய் என்னிடம் வந்து விலையின்றி
    வாங்கியே சாப்பிடுமே. - ஓ!

3. பாரச்சுமையோடு பாரில் வருத்தங்கள்
    பட்டு உழல்வோரே,-வாரும்,
நேரே, உமக்கிளைப்பாறுதலாவியை
    நேசமாய்த் தந்திடுவேன். - ஓ!

4. அப்பமல்லாத பொருளையும் திருப்தி
    ஆகாத வஸ்துவையும்,-நம்பித்
தப்பிதமாய்ப் பிரயாசத்தையும் பணம்
    தன்னையுமேன் கெடுப்பீர்? - ஓ!

5. கர்த்தரைக் கண்டடையத்தக்க காலத்தில்
    கண்டிடுமே உடனே;-உந்தன்
அத்தன் சமீபமாக இருக்கும் போதே
    ஆவலாய்க் கூப்பிடுமே. - ஓ!

 

ராகம்: முகாரி
தாளம்: சாபு தாளம்
ஆசிரியர்: வே. மாசிலாமணி