384. வினை சூழா திந்த இரவினில்

இந்த இரவினில் எனைக் காத்தாள்

பல்லவி

வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
விமலா, கிறிஸ்து நாதா.

அனுபல்லவி

கனகாபி ஷேகனே,[1] அவனியர்க் கொளிர், பிர
காசனே, பவ நாசனே, ஸ்வாமி! - வினை

சரணங்கள்

1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
பொன்றா[2] தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். - வினை

2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
ஜோதிநட் சத்திரம் எழுந்தன வானே;
சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. - வினை

3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். - வினை

4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். - வினை


ராகம்: தன்யாசி
தாளம்: ஆதி தாளம்

[1] பொன்போன்ற அபிஷேகமுள்ளவனே
[2] சாகாமல்