398. ஜெப சிந்தை எனில் தாரும்

ஜெப சிந்தை எனில் தாரும்

பல்லவி

ஜெப சிந்தை எனில் தாரும், தேவா,-என்னை

அனுபல்லவி

அபயமென் றுனக்குக்கை
அளித்தேன் பொற்பாதா. - ஜெப

சரணங்கள்

1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச,-உல
கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
தொன்மை ஆயக்காரன் போலஞ்ச,-பவ
தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச.[1] - ஜெப

2. இடைவிடாமல் செய்யும் எண்ணம்-என்
இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்;
சடமுலகப் பேயை வெல்லும்-நற்
சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம். - ஜெப

3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய,-தகா
நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
பேய்க்கண மோடுபோர் செய்ய,-நல்
ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய. - ஜெப


ராகம்: நாதநாமக்ரியை
தாளம்: சாபுதாளம்
ஆசிரியர்:  சா. சீமோன்

[1] உள் சுவற