394. ஜகநாதா குரு பரநாதா

ஜகநாதா குருபர நாதா

பல்லவி

ஜகநாதா, குரு பரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!

அனுபல்லவி

திகழுறுந்[1] தாதா, புகழுறும் பாதா,
தீதறும் வேத போதா! - செக

சரணங்கள்

1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
மொய்[2] கொண்டு கனியுண்ட பழியாலோ?
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - ஜகநாதா

2. எளிய வேஷந் தரித்தே இங் கவதரித்தாலும்,
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே;
ஒளிசெய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
உடு[3] வழி காட்டிடப் புரிந்தாயே. - ஜகநாதா

3. அருந் தவன்[4] கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
வரும் தவ மதியால் முன் மற[5] மன்னன் தேடிட, உன்
மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே. - ஜகநாதா

4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
மதுரப்பிரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே. - ஜகநாதா

5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
மேவி அனுபவிக்க நேர்ந்தாயே. - ஜகநாதா

6. அமரர்[6] முற்றும் அறியார், அடிகள்[7] சற்றும் அறியார்,
ஆர் உன் திறல்[8] அறிவார், கர்த்தாவே?
எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே. - செகநாதா


ராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வீரமா முனிவர்

[1]. பிரகாசமுள்ள
[2]. பெருமை
[3]. நட்சத்திரம்
[4]. சிமியோன்
[5]. கோபமுள்ள
[6]. தூதர்கள்
[7]. திருப்பாதங்கள்
[8]. வலிமை